கோத்தகிரி: கோத்தகிரி அருகேயுள்ள கீழ் கூப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடியின கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட குஞ்சபனை வனப்பகுதியில் அமைந்துள்ளது கீழ் கூப்பு பழங்குடியின கிராமப்பகுதி. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வருவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று செம்மனாரை பகுதியைச் சேர்ந்த சண்முகம்(38) கோழிக்கரை பகுதிக்கு வேலைக்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு வேலைக்கு வந்த சண்முகம் நேற்று இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் இன்று காலை அவரது உறவினர்கள் சண்முகத்தை தேடியுள்ளனர். அப்போது சண்முகம் படுகாயங்களுடன் நிலையில் கீழ்கூப்பு - செம்மனாரை சாலையில் வனப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சண்முகம் யானை தாக்கி உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.