ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு


சென்னை: மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட ஆன்மிகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் கடந்த செப்.7-ம் தேதி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன்வழங்கக்கோரி மகாவிஷ்ணுசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை. தனது பேச்சு அவர்களை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். தனது பேச்சு எடிட் செய்து யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. தனது முழு பேச்சையும் கேட்காமல், தனக்கு எதிரான அரசியல் அழுத்தம் காரணமாக போலீஸார் பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

போலீஸார் தன்னை காவலில் எடுத்து விசாரித்தபோதும் அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே இந்தவழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதிஎஸ்.கார்த்திகேயன், இந்த வழக்கில் கைதாகியுள்ள மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

x