பட்டப்பகலில் 3 பேர் வெட்டப்பட்ட சம்பவம்... சீர்காழி போலீஸார் கூண்டோடு மாற்றம்!


சீர்காழி காவல் நிலையம்

சீர்காழியில் சகோதரர்கள் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவத்தில், போலீஸார் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி, அவர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து, எஸ்பி- மீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, பிடாரி தெற்கு வீதியில் கடந்த 27-ம் தேதி அன்று அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த மதன் என்பவரை மர்மக் கும்பல் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதேபோல் அவரது சகோதரர்களான மணிகண்டன், சுரேஷ் ஆகியோரையும் வெவ்வேறு இடங்களில் மர்மக் கும்பல் ஒரே நாளில் அரிவாளால் வெடடியது. இந்த சம்பவங்கள் குறித்து சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சீர்காழியில் அடுத்தடுத்து சகோதரர்கள் மீது தாக்குதல்

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக விக்னேஷ், பூரணசந்திரன், குற்றாலீஸ்வரன், வினோத் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்குத் தொடர்பாக சீர்காழி போலீஸார் ஆரம்பத்திலிருந்தே மெத்தனமாக செயல்பட்டதாக கூறி, சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமாரை ஆயுதப்படைக்கும், சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமாரை குத்தாலம் காவல் நிலையத்துக்கும், மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசனை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா

மேலும் இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த அகஸ்டின், தலைமைக்காவலர் குலோத்துங்கன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், ராஜாஜி ஆகியோர் மணல்மேடு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சீர்காழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த 7 போலீஸார் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

x