10 வயது மகளை 6 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சி மாவட்டம் மல்லாபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த முகம்மது என்ற 43 வயது நபர் ஒருவர், தனது 10 வயது மகளைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.
அப்போது குற்றவாளி முகம்மது, தனது மகள் மீதான பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தினார். ஆனால், இதை சாதாரண பாலியல் குற்றமாக பார்க்க முடியாது என்றும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மீது கருணை காட்ட முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுபோன்ற குற்றங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால், அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது..
தன் மகளைக் காக்க வேண்டிய தந்தையே 10 வயது முதல் 16 வயது வரை அவருக்கு போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். தனது மகளுக்கு 10 வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். சிறுமிக்கு 16 வயதாக இருந்தபோது பலாத்காரம் தொடர்ந்ததால் கர்ப்பமானார். அதன் பிறகு அவள் தந்தையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்து, சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தனது மகளிடம் முகம்மது கூறியுள்ளார். ஆனாலும், சிறுமியிடம் போலீஸார் மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்றனர். அததுடன் பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்தார். நீதிபதி முன் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவுடன் டிஎன்ஏ மாதிரியும் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த குழந்தையின் தந்தை முகம்மது என்பதை இது நிரூபித்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி கேரளாவும் அதிர்ச்சி அடைந்தது.