பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜப்பானைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணருக்கு 17.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 பிரம்படியும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
போதையில் இருந்த சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவியான 20 வயது பெண் ஒருவரை தாக்கியதற்காக சிகையலங்கார நிபுணர் இக்கோ கிட்டா(38) என்பவருக்கு 17.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 பிரம்படியும் விதித்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற ஆவணத்தின்படி, கிட்டா, அறிமுகமில்லாத சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவியை கார் மூலம் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் செயலில் ஈடுபட்டதுடன், அவர் பலாத்காரம் செய்த காட்சிகளை வீடியோ எடுத்து நண்பருக்கு அனுப்பியதாக சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் டிசம்பர் 30, 2019 அதிகாலையில் நடந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்தே அதே நாளில் போலீஸாரால் கிட்டா கைது செய்யப்பட்டு மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் அவர் கீழ்நீதிமன்றத்தில் முறைப்படி குற்றம் சாட்டப்பட்டு அன்று முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜப்பானைச் சேர்ந்த இக்கோ கிட்டாவுக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 17.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20 பிரம்படிகளையும் தண்டனையாக விதித்துள்ளது. சிங்கப்பூரில் ஒரு ஜப்பானிய நாட்டவர் உடல் ரீதியான தண்டனையைப் பெற்ற முதல் நிகழ்வை இந்த வழக்காகும்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஏடிட் அப்துல்லா, கிட்டாவின் நடவடிக்கையை மிருகத்தனமான மற்றும் கொடூரமானது என்று விவரித்தார். குற்றத்தை கிட்டா ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரில், பலாத்காரம், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் நாசவேலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு சட்டப்பூர்வ தண்டனையாக பிரம்படி வழங்கப்படுகிறது.