'ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு' - சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்


மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சின் சில பகுதிகள் நீக்கப்பட்டது தொடர்பாக, சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி மக்களவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவராக முதல் உரையாற்றினார். அதில் பிரதமர் நரந்திர மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்தின்

சில பகுதிகள் இன்று காலை நீக்கப்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

“எனது உரையின் கணிசமான பகுதிகள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விதத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். ஜூலை 2ம் தேதியிட்ட மக்களவையின் திருத்தப்படாத விவாதங்களின் தொடர்புடைய பகுதிகளை இணைக்கிறேன். நீக்கப்பட்ட பகுதிகள் விதி 380ன் வரம்பிற்குள் வராது.

சபையில் நான் தெரிவிக்க விரும்புவது அடிப்படை எதார்த்தம். உண்மை நிலை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கூட்டுக் குரலை வெளிப்படுத்த சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு. இது மக்களுடைய கவலைகளை சபையில் எழுப்பும் உரிமை.

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா

அந்த உரிமையை நேற்று நான் பயன்படுத்தினேன். நான் கருதிய கருத்துகளை பதிவுகளில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. அனுராக் தாக்கூரின் உரை குற்றச்சாட்டுகள் நிறைந்தது. அதில் ஒரு வார்த்தை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இது போன்ற குறிப்பிட்ட செயல் தர்க்கத்தை மீறுகிறது. எனவே, எனது பேச்சிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும்"

இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

x