தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
கடந்த பட்டமளிப்பு விழாவின்போது இருவருமே பங்கேற்றிருந்தார்கள். எனினும் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணித்துள்ளார்.
கடந்த காலங்களில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி தவிர்த்த நிகழ்வுகள் உள்ளன.
எனினும் இதன் பிறகு நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அமைச்சர் பொன்முடி, ஆளுநருடன் இணைந்து பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.ஜெகந்நாதனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, ஆளுநர் பதவி நீட்டிப்பு வழங்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து பங்கேற்பதை அமைச்சர் பொன்முடி தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் மட்டுமின்றி உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், துறை அதிகாரிகளும் இன்றைய நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர்.