பிரம்மபுத்திரா நதியில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீர் வடிந்து செல்வதற்கான வாய்ப்பின்றி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் தற்போது அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திப்ருகார் உட்பட பல்வேறு நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள சிஆர்பிஎப் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை நீர் தேங்கி இருப்பதால் வீரர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழை நீருடன் விஷ ஜந்துக்களும் அடிக்கடி உலாவி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மழை வெள்ளம் காரணமாக சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து 101 நிவாரண முகாம்களை அமைத்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.