திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த மூன்றடைப்பு அருகே உள்ள மருதக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்று வரும் பொன்னாகுடி, மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நேற்று பள்ளி துவங்கியதும் மோதல் ஏற்பட்டது. சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 12-ம் வகுப்பு மாணவர் மற்றும் மற்றொரு மாணவர் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதற்கிடையே அங்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களை கலைந்துபோகச் செய்தனர். பின்னர் காயமடைந்த மாணவர்களை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், இப்பள்ளியில் அடிக்கடி சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் தொடர்பே இல்லாத மாணவர்கள் காயமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாதிப்பிரச்சினையில் பிளஸ் 2 மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அந்த மாணவனின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த நிலையில், அதே திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சாதியப்பிரச்சினையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.