தஞ்சை அரசு மருத்துவமனை செவிலியர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு... ஆம்புலன்ஸில் சென்ற அவலம்!


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் போராட்டம்

தஞ்சாவூரில் அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை செவிலியர்களை, ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஆளிநர்கள் பணியாற்றி வருகின்றனர். தஞ்சை மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இவர்கள் பேருந்து மூலம் தஞ்சாவூருக்கு வருகை தருகின்றனர்.

பின்னர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக இலவச பேருந்துகளில் இந்த அரசு மருத்துவமனை பணியாளர்களை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை

இலவச பயணச்சீட்டை வழங்கிவிட்டு, நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே இன்று காலை 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

காலை 6 மணிக்கு கிளம்ப வேண்டிய பேருந்து, கிளம்பாமல் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வந்ததாகவும் ஓட்டுநர்கள் அவர்களை இறங்கி வேறு பேருந்தில் செல்லுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட செவிலியர்கள்

இதனால் அதிருப்தி அடைந்த செவிலியர்கள், திடீரென பேருந்து நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதற்காக அனைவருக்கும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் முண்டியடித்தபடி அனைவரும் கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

x