மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது. பாஜகவினர் உண்மையான இந்து அல்ல என்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது பேச்சை தொடங்கினார். ஆனால், இதுபோன்ற படங்களை அவையில் காட்ட அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய நிலையில், சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மக்களவைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, "அரசியலமைப்பு மீதான தாக்குதலை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் சில தலைவர்கள் சிறையில் உள்ளனர். பிரதமரின் உத்தரவாலும், இந்திய அரசின் உத்தரவாலும் நான் தாக்கப்பட்டேன். அதில் மிகவும் மகிழ்ச்சியான பகுதி அமலாக்கத்துறையால் 55 மணிநேர விசாரணையாகும்.
மகாத்மா காந்தி குறித்து ஒரு படத்தின் மூலம் தான் அனைவருக்கு தெரியவந்ததாக பிரதமர் கூறுகிறார். அவரின் அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் கவனித்த மற்றொரு விஷயம், தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன.
நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்துகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். நீங்கள் உண்மையான இந்து அல்ல" எனத் தெரிவித்தார். மேலும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனவும், இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல் முயல்கிறார் என்றும் பிரதமர் மோடி பேசினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது என்றார். ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடியின் விவாதம் காரணமாக மக்களவையில் பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பு எம்.பிக்களும் முழக்கங்களையும் எழுப்பினார்கள்.