[X] Close

உடல் உறுப்பு தானம், ரத்த தானம், மருத்துவ முகாம்; உறுப்பினர்களுக்கு கமல் வேண்டுகோள்


kamal-birthday

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 22:54 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பிறந்தநாளையொட்டி 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, உடல் உறுப்பு தானம், ரத்த தானம், மருத்துவ முகாம், நிலவேம்புக் கஷாயம் முதலானவற்றை வழங்குங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  

நற்பணி இயக்கங்கள் மூலமாக, சக மனிதனின், தமிழனின் சமூக விழிப்புணர்விற்கும் அதன் மூலமாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துக் கொண்டே இத்தனை வருடங்கள் பயணித்திருந்தோம்.

அரசியக் கட்சியாக உருவெடுத்தபின், இந்த வருடம், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில், ஒவ்வொரு முறையும், நமது இயக்கத்தின் ஒழுங்குமுறையினையும், செயல்திறனையும், அடுத்தடுத்த கட்டங்களுக்கே நாம் நகர்த்தியிருக்கிறோம்.

தற்பொழுது, அரசியலையும் நற்பணியையும் ஒன்றுக்கொன்று இணைத்து, மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்திருக்கும் அரசியல் பயணம், தமிழக அரசியலுக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலுக்கே ஒரு புதிய அறிமுகம். இத் நம் அனைவருக்கும் ஒரு ஈடில்லாத அரசியல் வெற்றியை வென்று தரும் என்பது உறுதி.

யாரையும் புகழ்பாடாமல், வசை பொழியாமல் அர்த்தமிக்க வகையில் அரசியலை அணுகிக் கொண்டிருக்கிறோம். இது தீரம் மிகுந்த பெருமுயற்சியாகும். ஏற்கெனவே இங்கிருக்கும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் நலனை ஏதோ தாங்கள் இடும் பிச்சை போலவும் ஊழல் செய்வதை முழுநேரத் தொழிலாகவும் செய்துகொண்டிருக்கிற சூழலில், தனித்துவம் மிக்க அரசியல் தூய்மையை முன்னெடுத்திருக்கும் நம் கட்சி அவர்களுக்கு அச்சத்தைத் தருவதில் ஆச்சரியமில்லை.

இதுவரை இல்லாத வகையில், இருண்டகாலத்தில் இருக்கும் தமிழகத்தை வழி நடத்தக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு இன்று நம் முன் இருக்கிறது.

இந்தச் சூழலை மாற்றியமைக்கத் தவறிவிட்டால் நமக்கு வேறொரு வாய்ப்பு கிடைக்காது.

நம் எதிர்கால சந்ததிக்கும் நாம் இன்று சந்திக்கும் அவலம் மிக்க வாழ்வையே பரம்பரைச் சொத்தாக விட்டுச்செல்லவேண்டிவரும்.

இவ்வாறானதொரு அவலநிலையும் அவமானமும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் இருந்தும் முக்கியமாக தமிழர்களின் வாழ்வில் இருந்து அகற்றப்படவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். ஊழலில்லாத, கல்விச் சிறப்பு பெற்ற, விவசாயம் போற்றிடும், பெண்மையை மதித்திடும், வளர்ச்சிக்கு வித்திடும் வேலைவாய்ப்பை பெருக்கிடும், அரசியலும் சமூகமும் நெறியுடன் வாழ்ந்திடும், என் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்துப் பெற விரும்புவதைவிட, இனி பிறக்கப் போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்துச் சொல்லவே விரும்புகிறேன். எனவே, நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என்னை வாழ்த்துவதற்காக நேரில் வருவதை விட, உங்கள் பகுதிகளையே மக்கள் நலன் காக்கும் நற்பணிகளைச் செய்யவேண்டும் என்பதே எனது விருப்பம்.

எனது இந்த விருப்பத்தை, மாபெரும் அரசியல் மாற்றத்திற்காக பெரும் உழைப்பினை அர்ப்பணித்துக்  கொண்டிருக்கும் நமது களவீரர்களும் களவீராங்கனைகளும் செய்து முடித்திட வேண்டும்.

அதற்காக நீங்களும் நானும் இணைந்து செய்யவேண்டியது:

  1. வாழ்ந்த பின்பும் சமூகத்திற்கான நமது பணி தொடரும் வகையில் உறுப்புதானம் என்கிற மகத்துவமான கொடையினை நாம் மிகச்சிறப்பான முறையில் முன்னெடுத்து வந்திருக்கிறோம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அந்த வகையில் இந்த முறை அதை இன்னும் மிகச்சிறப்பான முறையில் மேற்கொள்ளவேண்டும்.
  2. ரத்ததான முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களை வருகிற 7ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை தங்கள் பகுதிகளில் நடத்த வேண்டுகிறேன்.
  3. இந்த முகாம்களை கூடுமானவரை கிராமப்புறப் பகுதிகளில் நடத்திட வேண்டுகிறேன்.
  4. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் அதிகமான அளவில் முகாம்களை நடத்திடவேண்டுகிறேன்.
  5. நமது ரத்த தான முகாம்கள் குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு உதவிடும் வகையில் இருந்திடவேண்டும்.
  6. நிலவேம்புக் கசாயம் வழங்குபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற இடங்களில் இருந்து பெறப்பட்ட பொடியினை (நீரில் கலக்காமல்) அனுமதி பெற்ற சித்த மருத்துவர் அருகில் இருக்கும்போது மட்டுமே பொதுமக்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டந்தோறும் நமது பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவரும் மேற்கூறப்பட்டுள்ள நற்பணிகளை திறம்பட நடத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலன் என்கின்ற நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் லட்சியத்தினை யாராலும் அசைக்கக்கூட முடியாது என்பதை உணர்த்துங்கள்.

இந்தக் கடமையைச் சரிவரச் செய்து சரித்திரம் படைப்ப்போம். நமது அரசியல் எழுச்சி நாளைய தமிழகத்தின் வளர்ச்சியாக இருந்திடவேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close