ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீட் மறு தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களை நிரப்புவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 7 மையங்களில் தேர்வு எழுதிய 1,563 மாணவர்களுக்கு தவறான கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டதால் தேர்வு எழுதுவதில் தாமதமானதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகளின் போது இவர்களில் பலர் ஊக்க மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை அடுத்து, 1,563 மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்தது.
இதன்படி மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றால், அவர்களுக்கு புதிய மதிப்பெண்கள் வழங்கப்படும். இல்லையேல் ஊக்க மதிப்பெண்கள் இன்றி அவர்கள் பெற்ற பழைய மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடந்த ஜூன் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும் இதில் 813 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதையடுத்து இந்த தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.