சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்திய ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில், நேற்றே கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களின் டி20 போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்தனர். இதனை தொடர்ந்து இப்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா சற்றுமுன் அறிவித்துள்ளார்.
ஓய்வுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘“நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன், மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவானது, இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான அவர், 74 போட்டிகள் விளையாடி 515 ரன்கள் எடுத்துள்ளார்.அவரின் அதிகபட்ச ஸ்கோர் 45* ஆகும். மேலும், அவர் 54 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் ஜடேஜா குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.