நைஜீரியாவில் பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் - 18 பேர் பலி; 48 பேர் காயம்


நைஜீரியாவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நைஜீரியாவின் பர்னோ மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு மற்றும் மருத்துவமனையில் தற்கொலைப்படையை சேர்ந்த பெண்கள் தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர், 48 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கருவுற்று இருந்த பெண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதில், முதல் குண்டுவெடிப்பு நேற்று மாலை 3 மணியளவில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்ந்தது. இது நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, குவோசாவில் உள்ள பொது மருத்துவமனையில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இறுதிச்சடங்கு ஒன்றிலும் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இவை நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

x