நடிகர் வடிவேலு வெங்கல்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ். கடந்த 2022ல் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தனது ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும் உதவி செய்யுமாறும் சமீபத்தில் வீடியோ ஒன்றில் உருக்கமாகப் பேசி திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து நடிகர் சிம்பு ரூ. 2 லட்சம் கொடுத்து உதவினார்.
சிம்பு மட்டுமல்லாது நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், ’கலக்க போவது யாரு?’ பாலாவும் உதவியிருக்கின்றனர். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் வெங்கல்ராவ். சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றியவர் பின்பு நகைச்சுவை நடிகராக மாறினார். ’தலைநகரம்’, ‘எம்டன் மகன்’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
வடிவேலுவைப் பற்றி பல இடங்களில் நெகிழ்ச்சியுடன் நல்ல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் வெங்கல்ராவ். இதனால், வடிவேலு இவருக்கு உதவ முன்வரவில்லையா என்ற கேள்வி இருந்தது. வெங்கல்ராவ் பற்றி விஷயம் கேள்விப் பட்ட வடிவேலு தொலைபேசியில் நலம் விசாரித்து, அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார்.