எச்சரிக்கை... உலகப்புகழ் பெற்ற மைசூரு அரண்மனைக்கு புறாக்களால் ஆபத்து!


மைசூரு அரண்மனை அருகே பறக்கும் புறாக்கள்

புறாக்களின் எச்சங்களால் உலகப்புகழ் பெற்ற மைசூரு அரண்மனையின் கட்டிடங்கள் சிதைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலம்,மைசூருவில் உலகப் புகழ்பெற்ற அரண்மனை உள்ளது. இதன் அழகு தற்போது புறாக்களால் பறிபோவதாக புகார் எழுந்துள்ளது. புறா எச்சத்தில் யூரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அடங்கிய கழிவுகள் பாரம்பரிய கட்டிடங்களின் மீது விழுவதால், கட்டிடங்கள் சிதைந்து கிடப்பதாக வரலாற்று ஆய்வாளர் பேரா. ரங்கராஜூ கூறுகிறார்.

மைசூரு அரண்மனை அருகே பறக்கும் புறாக்கள்

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்," புறாக்களின் எச்சத்தை ஒரு செம்பு அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டு சில நாட்கள் வைத்தால் ஓட்டை விழும். மைசூரின் பத்தாவது சாமராஜா வட்டமும், நான்காவது கிருஷ்ணராஜ வட்டமும் பளிங்குக் கற்களால் ஆனது. இந்த வட்டத்தில் புறாக்களை இறக்கி விடுவதால் பளிங்கு சேதமடையும். இந்த எச்சங்கள் அரண்மனைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த வட்டங்களுக்கு அருகில் புறாக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். இதற்கு புறாக்கள் வெளியேற விதைகளைத் தூவுவதை தடுக்க வேண்டும். பாரம்பரிய அரண்மனையைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்தப் பின்னணியில், அரண்மனை முன் புறாக்களுக்கான தானிய மூட்டைகளை தினமும் கொட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மைசூரு அரண்மனை எதிரே உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே தினமும் காலையில் கோதுமை தானியங்கள் சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்படுகிறது. அதை உண்பதற்காக ஆயிரக்கணக்கான புறாக்கள் அங்கு முகாமிட்டுள்ளன. தானியங்களை உண்ணும் போது அவை பறக்கும் காட்சியை படமாக்க பிரபல ஒளிப்பதிவாளர்களும் வருகிறார்கள். இது சுற்றுலா பயணிகளுக்கு தினசரி செல்ஃபி திருவிழாவாகும்.

ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே புறாக்கள்

இது தொடர்பாக மைசூரு மாவட்ட ஆட்சியர் டாக்டர். கே.வி.ராஜேந்திரன் கூறுகையில் ," அரண்மனை எதிரில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே, புறாக்களுக்கு கோதுமை, சோளம், நெல் மூட்டைகளை வழங்குகின்றனர். சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிக அளவில் உணவு தானியங்களை போட்டு வருகின்றனர். இதனால் அரண்மனையைச் சுற்றி புறாக்கள் வாழ ஆரம்பித்துள்ளன. இந்த புறாக்கள் அரண்மனை கட்டிடம் முழுவதும் எசசமிடுவதால் கட்டிடங்கள் சேதமாகி வருகின்றன. இது தொடர்ந்தால், வரும் நாட்களில் கலாச்சார கட்டடம் தன் அழகை இழந்துவிடும். எனவே இதனை இப்போதே தடுக்க வேண்டும்" என்றார்.

x