தமிழகத்தில் கனிமவள கொள்ளை ஒன்று மட்டுமே திமுக நிறைவேற்றிய ஒரே வாக்குறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை மூலமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழகத்தில் மணல் கொள்ளையின் மூலம் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக மணல் கொள்ளை அடித்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு மணல் கொள்ளை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. தற்போது கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை, தமிழக காவல்துறை இயக்குனருக்கு எழுதிய கடித விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்த கடிதத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில், 9 மாதங்களாக நடந்த விசாரணையில், ஓராண்டில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 23.84 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அனுமதி அளித்த இடத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் ராட்சத இயந்திரங்களை வைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட 4 மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியுள்ளனர். 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில், 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து மாவட்டங்களில் 190 ஹெக்டேர் அளவில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டு இருப்பது அமலாக்கத்துறை கடிதத்தில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் துணையோடு நடந்துள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர். ஆனால் தமிழக அரசு இந்த மணல் கொள்ளை தொடர்பாக இதுவரை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்த அடுத்த பத்து நிமிடத்தில் திமுகவினர் மணல் எடுக்கலாம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தனது கட்சிக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, தமிழகத்தின் கனிம வளங்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது.
மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது. உடனடியாக மணல் கொள்ளையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.