தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல் முறையீடு செய்த மேலும் 1.48 லட்சம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திமுக கடந்த சட்டப் பேரவை தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தப் பின்னர் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தியது. ஆனால் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தகுதி இருந்தும் ஏராளமானோருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஏராளமான குடும்பத்தலைவிகள் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடுவில் வந்ததால், நலத்திட்டப் பணிகளை அரசு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்தல் செயல்பாடுகள் (விக்கிரவாண்டி தவிர) முடிவடைந்து விட்டதால் மக்கள் நலத்திட்டப் பணிகளில் அரசு மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கெனவே 1.15 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது மேல்முறையீடு செய்த 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.