இந்தியாவின் முதல் ஃபீல்ட் மார்ஷலான சாம் மானெக்ஷாவின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள அவரது கல்லறையில் முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1914ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர் சாம் மானெக்ஷா. இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய படையில் பணியாற்றிய அவர், இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். 40 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ராணுவத்தில் அவர் பணியாற்றியுள்ளார். 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்தை வழி நடத்தினார். 13 நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி கண்டு வங்கதேச விடுதலைக்கு காரணமாக இருந்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973ம் ஆண்டு அவருக்கு இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவியான ஃபீல்ட் மார்ஷல் பதவி, அவருக்கு வழங்கப்பட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்திற்கு அருகில் வசித்து வந்தார். 2008ம் ஆண்டு மார் ஜூன் மாதம் 27ம் தேதி அவர் காலமானதை அடுத்து உதகையில் உள்ள பார்ஸி சமூகத்தினரின் கல்லறை தோட்டத்தில் ராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகள் சார்பில் அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அவரது 16-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று உதகையில் உள்ள சாம் மானெக்ஷாவின் கல்லறையில் ராணுவ மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெலிங்டன் ராணுவ கல்லூரியின் தலைவர் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.