குப்பைக்கிடங்கில் தீ விபத்து; 5 கீ.மீ. சுற்றளவு சூழ்ந்த புகை... பொதுமக்கள் அவதி!


தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பைக்கிடங்கில் பயங்கர தீவிபத்து

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சேமிக்கப்படும் பல டன் குப்பைகள், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக இங்கு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் இன்று திடீரென தீ பற்றி உள்ளது.

தஞ்சை நகர் முழுவதும் புகை பரவியுள்ளதால் மக்கள் அவதி

தீ பரவி குப்பைகள் முழுவதும் பற்றி எரியத் துவங்கியதால், கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறை வீரர்கள், தண்ணீர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஒரு புறத்தில் தீயை அணைத்தால் மற்றொருபுறம் தீ பற்றி எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு புகை பரவி இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மூச்சு விடுவதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் குப்பை கிடங்கு வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சை சுகாதாரத்துறை சார்பில் 40 பேர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்

இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் 5 மருத்துவர்கள் தலைமையில், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் என 40 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குப்பைக்கிடங்கு அருகேயுள்ள ஆனந்தம் நகர், சாய்பாபா கோயில், வடக்கு அலங்கம், முருகன் ஆசிரமம், ஜெபமாலைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இந்த குழுவினர் முகக்கவசங்களை வழங்கி வருகின்றனர். மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் நபர்களுக்கு பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

x