மின் வயர் அறுந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி... காப்பாற்றச் சென்ற நண்பரும் உயிரிழந்த பரிதாபம்!


மின் வயர் அறுந்ததால் இறந்து கிடக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்.

கனமழையால் மின் வயர் அறுந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மங்களூருவில் நடைபெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ள ரொசாரியோ பள்ளி அருகே இந்த கோரச்சம்பவம் நடைபெற்றது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடப்பட்டு வருகிறது.

இடிந்து விழுந்த வீடு

இந்த நிலையில், தட்சிண கன்னடாவில் இன்று வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவின் புறநகரில் உள்ள மதானி நகரில் ஒரு வீட்டின் தடுப்புச்சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதனால் சுவர் இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மங்களூருவில் கனமழையால் மின் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலையில் ரொசாரியோ பள்ளி அருகே ராஜு மற்றும் தேவராஜு என்ற ஓட்டுநர்கள் இருவர் ஆட்டோக்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

அப்போது திடீரென காற்றில் மின் வயர் அறுந்து ஒரு ஆட்டோவில் விழுந்தது. இதில் ராஜுவை மின்சாரம் தாக்கியது. இதைப் பார்த்த தேவராஜு அவரைக் காப்பாற்றச் சென்றார். ஆனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாண்டேஷ்வர் காவல் நிலைய போலீஸார், விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காற்று மற்றும் கனமழையால் மின் வயர் அறுந்துவிழுந்து அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்தவர்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

x