5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால், இரண்டாவது நாளிலேயே ஏலம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை வழங்குவதற்காக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளை விற்பனை செய்யும் ஏலம் டெல்லியில் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கிய இந்த ஏலத்தின் மூலம் 96 ஆயிரத்து 320 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளை விற்பனை செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது ஏராளமான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றைகளை கைப்பற்ற முண்டியடித்ததால் இந்த ஆண்டும் அதேபோன்று ஆர்வம் இருக்கும் என மத்திய அரசு பெரிதும் எதிர்பார்த்து இருந்தது.
ஆனால் முதல் நாளில் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் இந்த ஏலத்தில் பங்கேற்று தங்களது ஏலத் தொகையை குறிப்பிட்டு இருந்தன. 2வது நாளான நேற்று 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் ஏலத்தில் பங்கேற்க பிற நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் ஏலம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி அதிகபட்சமாக பாரதி ஏர்டெல் 6,857 கோடி ரூபாய்க்கு 97 மெகா ஹெர்ட்ஸ் அலைகற்றையை விலைக்கு வாங்கியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் 30 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 3,510.4 கோடி ரூபாய்க்கும், ரிலையன்ஸ் ஜியோ 14.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 973.62 கோடி ரூபாய்க்கும் வாங்கி உள்ளன. இதன் மூலம் மத்திய அரசுக்கு 11,340.78 கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பிடும்போது இது மூன்றாவது மிகவும் குறைவான ஏலத்தொகை ஆகும். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை காட்டிலும் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைவாகவே அலைக்கற்றை ஏலம் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.