இந்தியாவின் குடிப்பழக்கம் மற்றும் குடியால் நேரிடும் மரணங்கள், சர்வதேச அளவில் நாளுக்கு நாள் அதிரித்து வருவதை உலக சுகாதார நிறுவனத்தின் அண்மை அறிக்கை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
இந்தியாவில் சாராயம் அருந்தி சாவோரின் எண்ணிக்கை, சீனாவைவிட இருமடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இது அடுத்த சில ஆண்டுகளில் கவலையூட்டும் வகையில் அதிகரிக்கவும் கூடும். மது போதை என்பது தனிபட்ட நபரின் உடல்நலம் சார்ந்ததாக மட்டுமன்றி சமூகத்தின் தீங்காகவும் மாறி வருவதால், அதனையொட்டிய கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் மதுவால் ஏற்படும் இறப்புகள், இருபாலினத்தவரையும் உள்ளடக்கி 1,00,000 மக்கள்தொகைக்கு 38.5 என்பதாக உள்ளது. இதுவே சீனாவில் 16.1 என்பதாகவே உள்ளது. இந்த வகையில் சீனாவை விட இந்தியாவின் சாராய சாவுகள் இருமடங்குக்கும் சற்று அதிகமாகும். ஆண்களை மட்டுமே ஒப்பிடும்போது, சீனாவின் சாவு 29.6 என்பதாக உள்ளது. அதுவே இந்திய ஆண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 63 என்பதாக கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோன்று பெண்களின் எண்ணிக்கையிலும் சீனாவின் 3.3-க்கு எதிராக இந்தியா 13.5 என்பதாக உள்ளது.
மது மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த உலகளாவிய சூழ்நிலையைப் படம்பிடிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் அண்மை அறிக்கை, 31 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தற்போதைய குடிகாரர்களாக வலம் வருகின்றனர் என்கிறது. ஆண் - பெண் விகிதத்தில் ஆண்கள் 40.9 சதவீதத்துடன், 20.8 சதவீதத்திலான பெண்களை விஞ்சுகிறார்கள். 2019-ம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 4.9 லிட்டராக இருந்தது. இதுவே எதிர்வரும் 2030 -ம் ஆண்டில் 6.7 லிட்டராக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.
ஒப்பீட்டளவில் இந்த தனிநபர் நுகர்வு என்பது அமெரிக்காவில் 5.5 லிட்டராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 9.2 லிட்டராக முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மது அருந்துவதால் ஏற்படும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. 2019-ல் மட்டும் உலகளவில் 26 லட்சம் பேர் மதுவால் மரணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.