கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை: மரங்கள் சாய்ந்தன; வீடுகள் சேதம்


கேரளாவில் பலத்த மழை

கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்வதால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன, மேலும் எண்ணற்ற வீடுகளும் சேதமடைந்தன.

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. திருச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் கோழிக்கோடு மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆலப்புழா, கண்ணூர் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஓச்சிரா பரபிரம்ம கோயிலில் உள்ள அன்னதான மண்டபத்தின் ஒரு பகுதி, தொடர் மழையில் இடிந்து விழுந்தது.

எர்ணாகுளம் அருகே ஆலுவாவில் உள்ள பெரியாற்றின் கரையோரத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மலங்கரா, பாம்பிளா, கல்லார்குட்டி போன்ற பல அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

குறிப்பாக மலங்கரா அணையின் மூன்று ஷட்டர்கள் தலா ஒரு மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளதால், மூவாட்டுப்புழா, தொடுபுழா ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மழை

தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. சமீபத்திய வானிலை ஆய்வு மைய தகவல்படி, கொல்லம், பதினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் வரவிருக்கும் நேரங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மிதமானது முதல் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x