மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கைகோத்து ஜோடியாக சென்றனர்.
மக்களவைக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வந்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், நடிகை கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் கைகோத்து ஜோடியாக நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டத்தின் போதும், இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நெருக்கமாக சந்தித்து, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட காட்சிகள் வெளியாகின.
லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரான சிராக் பாஸ்வான், உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சராக உள்ளார். இவரது கட்சி பீகாரில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் சிராக் பாஸ்வானும், நடிகை கங்கனா ரனாவத்தும் 'மைலே நா மிலே ஹம்' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு சிராக் பாஸ்வான், தனது தந்தை, மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் நிழலில் இருந்து அரசியலில் தீவிரம் காட்ட துவங்கினார்.
அதே நேரத்தில் கங்கனா, திரைத்துறையில் வெற்றிகரமான பயணத்துடன் படிப்படியாக அரசியலுக்குள் நுழைந்தார்.
பாஜகவை தீவிரமாக ஆதரித்து வரும் கங்கனா ரனாவத் இந்தத் தேர்தல் மூலம் முதல் முறையாக எம்.பி-யாகி உள்ளார். இவர் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனாவின் 'எமெர்ஜென்சி' திரைப்படம் வரும் செப்டம்பர் 6ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பொது வெளியில் நெருக்கமாக நடந்து கொள்வது கவனம் பெற்று வருகிறது.