தன்பால் உறவுக்கு உடன்படாத மருமகள் மீது பிளேடு கொண்டு தாக்குதல்... மாமியார் மீது போலீஸில் புகார்


பிளேடு கொண்டு தாக்குதல்

தன்பாலின உறவுக்கு உடன்படாத மருமகள் மீது பிளேடு கொண்டு மாமியார் தாக்குதல் நிகழ்த்தியதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிக்கும் ஒரு பெண், தனது கணவர், மைத்துனர், மாமியார் உள்ளிட்ட புகுந்த வீட்டினர் தன்னை சதா குடும்ப வன்முறைக்கு ஆளாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். 2022-ம் ஆண்டு காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் உபாத்யாய் என்பவரை திருமணம் செய்த சில மாதங்களில், புகுந்த வீட்டில் விசித்திர பிரச்சினைகள் வெடித்தன.

குடும்ப வன்முறை

அவற்றின் உச்சமாக மாமியார் தன்னை தன்பால் உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததில் பிளேடு கொண்டு தாக்கியதோடு, பிரச்சினையை திசை திருப்ப கணவன் - மனைவி இடையே பூசல்களை தொடர்ந்து ஏற்படுத்தியதாகவும் அப்பெண் குற்றம்சாட்டி உள்ளார். அண்மையில் மருமகளை பிளேடு கொண்டு மாமியார் தாக்கியதில், கைகளில் 5 இடங்களில் ஆழமான காயங்களுக்கு தையல் போடப்பட்டதில், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உதவியை நாடியிருக்கிறார்.

மருமகள் அளித்துள்ள போலீஸ் புகாரில், தனது கணவர் மற்றும் மைத்துனர் என வீட்டின் இரு ஆண்களை ஏவும் மாமியார், தன் மீது தொடர் சித்ரவதைகளை பிரயேகிப்பதாக தெரிவித்துள்ளார். தன்னை ஒரு மாத காலத்துக்கு மாற்று ஆடைகூட வழங்காது ஒரு அறையில் தனித்து அடைத்ததாகவும், அதனை தட்டிக்கேட்டதற்கு மைத்துனரைக் கொண்டு தனது ஆடைகளை பறித்துக்கொண்டதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

குடும்ப வன்முறை

மேலும் புகுந்த வீட்டினரால் வரதட்சணை நெருக்கடி மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகத்துக்கு தான் தொடர்ந்து ஆளாக்கப்பட்டதாகவும் போலீஸ் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார். 2023-ல் தனக்கு மகன் பிறந்ததும், புகுந்த வீட்டின் பிரச்சினைகள் சீராகும் என நம்பியதாகவும் ஆனால், அந்த குழந்தைக்கு தான் தந்தையில்லை என கணவர் புதிய பிரச்சினையை கிளப்பியதில், நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

புகார் தெரிவித்த பெண் வீட்டார் தரப்பில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பலமுறை தங்கள் மகள் வீட்டைவிட்டு வெளியே விரட்டப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் புகுந்த வீட்டில் அப்பெண் சேர்க்கப்பட்டதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளில் சில கைகலப்பில் முடிந்திருப்பதாகவும் தங்கள் பங்குக்கு அவர்கள் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பாக ஆக்ரா போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x