ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய யெஸ் வங்கி முடிவு... முதற்கட்டமாக 500 பணியாளர்கள் நீக்கம்


யெஸ் வங்கி

நிர்வாக சீரமைப்பு மற்றும் செலவினக் குறைப்பு என்ற பெயரில் யெஸ் வங்கி தனது பணியாளர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

கரோனா காலத்தின் மத்தியில் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி மீண்ட யெஸ் வங்கி, தனது மீட்சிக்கான உபாயங்களை பலவகையிலும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக தற்போது பணிநீக்க அஸ்திரத்தை ஏந்தியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதன் முடிவில் முதற்கட்டமாக 500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது.

பணிநீக்கம்

குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் கடன் வழங்கியதில், யெஸ் வங்கி பெரும் சர்ச்சையில் சிக்கியது. வங்கி நிறுவனர் ராணா கபூர் உள்ளிட்ட பலர் சர்ச்சைக்கு ஆளானார்கள். தள்ளாட்டத்தில் இருந்த யெஸ் வங்கிக்கு பாரத ஸ்டேட் வங்கி உதவிக்கரம் நீட்டியதில், மீட்சியின் சாத்தியம் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் யெஸ் வங்கி தற்போது பணியாளர் நீக்கத்தையும் கையில் எடுத்துள்ளது.

நிர்வாகச் சீரமைப்புக்கான பெரும் நடவடிக்கையாக, ஒரு பன்னாட்டு ஆலோசகரின் வழிகாட்டுதல் பெயரில் முதன்மையாக செயல்திறனை மேம்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு யெஸ் வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2024 நிதியாண்டின் கணக்குப்படி தனது 28,000 பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியமாக ரூ3,774 கோடி யெஸ் வங்கி செலவிட்டு வருகிறது.

யெஸ் வங்கி

இந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் இளநிலை நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் டிஜிட்டல் மயமாவதன் மத்தியில், இந்த ஊழியர்களின் இருப்பு கேள்விக்குறியானது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் பணியாளர்களின் திறன் அடிப்படையில் வடிகட்டும் முயற்சியில் கணிசமானவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். பல ஆயிரம் எண்ணிக்கையில் உத்தேசிக்கப்படும் இந்த பணிநீக்க நடவடிக்கைகளின் தொடக்கமாக தற்போது 500 ஊழியர்களை வெளியேற்றுகிறது யெஸ் வங்கி.

x