மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் பேசியதாவது:
“சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கூட இதே கோரிக்கையை பாமக உறுப்பினர் கோ.க.மணி வலியுறுத்தினார். சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒரு மாபெரும் பணி. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டப் பிரிவு 3-ன் படி ஒன்றிய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் பொதுவெளியில் ஒரு கருத்து பரவலாக பேசப்படுகிறது.
புள்ளி விவர கணக்கெடுப்பு சட்டம் 2008-ன் கீழ் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும். இந்த சட்டத்தின் படி, மாநில அரசுகள் சமூக, பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டத்தின் உட்பிரிவு (அ)-ன் படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்க இயலாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-ன் கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்க இயலாது. மேலும் இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசு கணக்கெடுப்பு நடத்தினால்தான் சட்டப்படி அது நிலைக்கும். எனவே தான் இப்பணியை ஒன்றிய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறோம்.”
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதைத் தொடர்ந்து தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்ற முதல்வரின் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.