மக்களவை சபாநாயகராக 2வது முறையாக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
18வது மக்களவைக்கான உறுப்பினர்கள், பொதுத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லாவை கொண்டுவர பாஜக முடிவு செய்திருந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் இருந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, பாஜக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 1952, 1967 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. அதன் பின்னர் கடந்த 48 ஆண்டுகளாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து சுமூகமான முடிவு எடுத்து சபாநாயகரை தேர்தல் இன்றி தேர்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் 8 முறை எம்பி-யாக வெற்றி பெற்றுள்ள கேரள மாநிலம் மாவேலிக்கரா தொகுதியின் எம்பி-யான கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
15 தீர்மானங்கள் ஓம் பிர்லாவிற்கு ஆதரவாகவும், 3 தீர்மானங்கள் சுரேஷுக்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில், ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2வது முறையாக சபாநாயகர் பதவியை ஓம் பிர்லா ஏற்றார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து அவருக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எம்.ஏ.ஐயங்கார், குர்தியால் சிங் தில்லான், பல்ராம் ஜாக்கர், ஜி.எம்.சி பாலயோகி ஆகியோர் இரண்டு முறை சபாநாயகர்களாக பதவி வகித்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக ஓம் பிர்லா இரண்டாவது முறையாக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.