ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ்: மக்களவை சபாநாயகர் தேர்தலின் முக்கிய அம்சங்கள்


ஓம்பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ்

மக்களவை சபாநாயகர் பதவிக்கு, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் மக்களவை இடைக்காலத் தலைவராக பர்த்ருஹரி மஹதாப் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கடும் அதிருப்தி தெரிவித்தது.

இந்நிலையில் மக்களவை சபாநாயகரை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய, பாஜக சார்பில் நேற்று எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மக்களவை சபாநாயகர் தேர்தல்

ஆனால் அதனை பாஜக தலைவர்கள் ஏற்க மறுத்ததால், சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதைத் தொடர்ந்து தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.

ஓம் பிர்லா, ராஜஸ்தானின் கோட்டா மக்களவை தொகுதியிலிருந்து 3 முறை எம்பி-யாகவும், 17வது மக்களவையில் சபாநாயகராகவும் இருந்தவர்.

காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் கேரளாவின் மாவேலிகரா மற்றும் அடூர் தொகுதிகளிலிருந்து 8 முறை எம்பி-யாக தேர்வானவர். சபாநாயகர் எம்பி-க்களின் எண்ணிக்கை மற்றும் வாக்களிக்கும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு எளிய பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஓம்பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ்

இந்நிலையில் 5 எதிர்க்கட்சி எம்பி-க்கள், 2 சுயேச்சைகள், இன்னும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு 232 உறுப்பினர்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சியை இழந்த, ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தன் வசம் உள்ள 4 எம்பி-க்களின் ஆதரவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

x