100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமுறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய தனிப்படை வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ளான நிலம் இருந்துள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போலியாக பத்திரப்பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரகாஷ் கேட்டபோது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனால் விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என நிலை உருவானது. இதையடுத்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதனை தள்ளுபடி செய்து கரூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.ள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் வடமாநிலம் ஒன்றில் பதுங்கியிருக்கலாம் என தகவல் கிடைத்திருப்பதால், சிபிசிஐடி தனிப்படை போலீஸார் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.