நீலகிரி, கோவையில் விடிய விடிய கொட்டிய மழை... வால்பாறை, கூடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வால்பாறை, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை கோவை மற்றும் நீலகிரியில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

சாலையில் பெருக்கெடுக்கும் வெள்ளம்

விடிய, விடிய பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளி மாணவர்கள்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 தமிழக மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.

x