ரூ.96,238 கோடி மதிப்பிலான 10வது அலைக்கற்றை ஏலம் - துவக்கியது மத்திய அரசு!


5ஜி அலைக்கற்றை ஏலம்

தொலைத்தொடர்பு சேவைகளுக்கான ரூ.96,238.45 கோடி மதிப்பிலான 5 ஜி அலைக்கற்றை ஏலத்தை தொடங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு அலைவரிசைகளில் மொத்தம் 10,522.35 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. இது ரிசர்வ் விலையில் ரூ.96,238.45 கோடி மதிப்பு கொண்டது. தற்போது உள்ள தொலைத்தொடர்பு சேவைகளை அதிகரிக்கவும், சேவைகளின் தொடர்ச்சியை பராமரிக்கவும், அரசு ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துகிறது என தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம்

இதன்படி, 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஆகிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகள் ஏலம் எடுக்கப்படுகின்றன.

இந்த ஏலம் இன்று காலை 10 மணிக்குத் துவங்கியது. இதில் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் ஆகிய மூன்று ஏலதாரர்கள் பங்கேற்றுள்ளனர்.

1800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு ரிசர்வ் விலையில் ரூ.21752.4 கோடியும், அதைத் தொடர்ந்து 800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கு ரூ.21,341.25 கோடியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில், அதிநவீன உயர்தர தொலைத்தொடர்பு சேவைகளை எளிதாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்கள்

ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள் தற்போதைய நிகர மதிப்பு தொகையை (என்பிவி) முறையாகப் பாதுகாத்து, 20 சம வருடாந்திர தவணைகளில் 8.65 சதவீத வட்டி விகிதத்தில் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஏலத்தின் மூலம் பெறப்பட்ட ஸ்பெக்ட்ரம்-ஐ குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம். இந்த ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கு ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் (எஸ்யுசி) இருக்காது என தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

x