ஒரு குடும்பத்தை அதிகாரத்தில் அமரவைக்க, அரசியல் சாசனத்தை காங்கிரஸ் நசுக்கியது - அமித் ஷா ஆவேசம்


அமித் ஷா - ராகுல் காந்தி

நாட்டில் அவசரநிலை அமலானதன் 49வது ஆண்டு தினத்தில், பாஜக தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியை சரமாரியாக சாடி வருகின்றனர். அவர்களில் ஒருவராக அமித் ஷாவும் இன்று இணைந்திருக்கிறார்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான வகையில் ஆட்சேபக் குரல் எழுப்பினார். மேலும் ’ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை அதிகாரத்தில் வைத்திருப்பதற்காக’ அரசியலமைப்பின் ஆன்மாவை பலமுறை நசுக்கியதாகவும் காங்கிரஸை அவர் சாடினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

1975-ம் ஆண்டு அமலான எமர்ஜென்சியின் 49-வது ஆண்டு நினைவு நாளில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து அமித் ஷா தாக்கினார். அவரை கட்சியின் இளவரசர் என்றும், பாட்டி இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியதை ராகுல் மறந்து விட்டதாகவும், ‘அவசரநிலையில் எந்தத் தவறும் இல்லை’ என்று ராகுல் தந்தை ராஜிவ் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதையும் அமிஷ் ஷா சுட்டிக்காட்டினார்.

சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் செயல், குடும்பம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் அக்கட்சியின் போக்குகள் காட்டுவதாகவும் அமித் ஷா சாடினார். இந்தியில் வெளியிட்ட முந்தைய பதிவு ஒன்றில், ’திமிர்பிடித்த மற்றும் எதேச்சதிகார காங்கிரஸ் அரசாங்கம் ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக 21 மாதங்களுக்கு மக்களின் சிவில் உரிமைகளை நிறுத்தி வைத்தது’ என்றார்.

ஜனநாயகத்தைக் கொன்று, திரும்பத் திரும்பக் கேடு விளைவித்த காங்கிரஸின் நீண்ட வரலாறுக்கு எமர்ஜென்சி மிகப்பெரிய உதாரணம் என்றார். ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கப்பட்டது, அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது, நீதித்துறை கட்டுப்படுத்தப்பட்டது ஆகியவற்றின் மத்தியில் அவசரநிலைக்கு எதிராக போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

x