வினாத்தாளை கசியவிட்டால் ஆயுள் தண்டனை; ரூ.1 கோடி அபராதம்: உபி-யில் அமலாகிறது புதிய சட்டம்


யோகி ஆதித்ய நாத்

வினாத்தாள் கசிவு சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேச அரசு கொண்டுவரும் புதிய சட்டம், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மற்றும் ரூ1 கோடி அபராதம் விதிக்க வழி செய்கிறது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட், நெட் போன்ற தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் தேசிய அளவில் பெரிதாய் வெடித்துள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் பாஜக கூட்டணி அரசுக்கு புதிய சங்கடத்தையும் இவை தந்துள்ளன. தேசியத் தேர்வுகள் மட்டுமன்றி, மாநில அளவிலான தேர்வுகளையும் வினாத்தாள் கசிவுகள் விட்டு வைக்கவில்லை. உத்தரபிரதேசம் போன்ற அளவில் பெரிய மாநிலங்கள், அங்கு அதிகரிக்கும் வினாத்தாள் கசிவு விவகாரங்களை கட்டுக்குள் கொண்டு வர புதிய சட்டத்தை அமல்படுத்த இருக்கிறது.

நீட் தேர்வு

கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பு தேர்வு உட்பட அண்மையில் அரங்கேறிய மாநில அரசு தேர்வுகளின் பல்வேறு வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தொடர்ந்து, ’உத்தரபிரதேச பொதுத் தேர்வுகள் சட்டம் 2024’ என்பதை, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசு அறிமுகப்படுத்த உள்ளது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ1 கோடி வரை அபராதம் விதிக்கும் விதிகளை உள்ளடக்கிய முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது

உபி காவல்துறையின் 60,244 கான்ஸ்டபிள் பதவிகளுக்கான மிகப்பெரிய ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள்கள் கடந்த பிப்ரவரியில் கசிந்தன. தொடர்ந்து வினாத்தாள் கசிவுகள் பற்றிய புகாரின் காரணமாக, ஆர்ஓ மற்றும் ஏஆர்ஓ-களுக்கான மாநில தேர்வாணையத்தின் பூர்வாங்க ஆட்சேர்ப்புத் தேர்வு மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து தீவிர பரிசீலனைக்குப் பின்னர் புதிய சட்டம் அமலாக இருக்கிறது. இது மாநில அரசின் ஆட்சேர்ப்பு தேர்வுகள், பதவி உயர்வு தேர்வுகள் மட்டுமன்றி உயர்கல்வியின் பல்வேறு பட்டங்கள், டிப்ளமாக்கள் மற்றும் சான்றிதழ்களுக்கான தேர்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

வினாத்தாள் கசிவு

போலியான வினாத்தாள்களை விநியோகித்தல், போலியான வேலைவாய்ப்பு இணையதளங்களை உருவாக்குதல் போன்ற குற்றங்களும் புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும். குற்றம் நிரூபணம் ஆகுமெனில் 2 ஆண்டுகள் முதல் ஆயுள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் ரூ1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் உபி அரசு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கான இடையூறு நேர்ந்தால், குற்றவாளிகள் தரப்பிலிருந்து நிதி இழப்புகளை மீட்டெடுக்கவும் , சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை நிரந்தரமாக தடுப்புப் பட்டியலில் சேர்க்கவும் இந்த சட்டம் அனுமதிக்கும். குறிப்பாக, ஜாமீனில் வெளிவர முடியாத மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக்கூடிய குற்றங்களாக இவை அடையாளம் காணப்படும்.

x