பகீர்... 7வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட நாய்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!


மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய் இறந்து கிடக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 7வது மாடியில் இருந்து தெருநாயை ஒருவர் கீழே தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் தெருநாய் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள விஹான் ஹெரிடேஜ் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து நாய் ஒன்று தூக்கி வீசப்பட்டது. கீழே விழுந்தவுடன் நாய் பரிதாபமாக இறந்தது.

இறந்து கிடக்கும் நாய்.

இந்த வீடியோவை காசியாபாத் விலங்குகள் நலச்சங்கத்தின் தலைவர் சுர்பி ராவத் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் கொதிப்படைந்துள்ளனர். நாயை மாடியில் இருந்து தூக்கி வீசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் குற்றத்தைச் செய்தது யார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. கடந்த 22-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வேகமாக இணையங்களில் பரவி வருகிறது. இந்த குற்றம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரி அரவிந்த்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இறந்த தெருநாயை காரில் கட்டி அகமதாபாத் நெடுஞ்சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது 7வது மாடியில் இருந்து தெருநாய் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x