இலங்கை சிறையில் 47 மீனவர்கள், 166 மீன்பிடிப் படகுகள் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!


முதலமைச்சர் ஸ்டாலின்

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்திடவும் வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,'இன்று IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கைது

2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழகத்தின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும்,166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.' என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

x