தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார் கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி கோபிநாத்!


கிருஷ்ணகிரி எம்.பி கோபிநாத்

தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்ற நிலையில், கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் அமர்வு நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் இடைக்கால சபாநாயகராக பர்தருஹரி மஹதாப் தேர்வு செய்யப்பட்டார். முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் எம்.பி-யாக பதவியேற்றனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களவைக்கு தேர்வான திமுக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழக திமுக கூட்டணி எம்.பி-க்கள் கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை தங்கள் கைகளில் வைத்து, உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

திமுக எம்.பிக்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்க எனச் சொல்லி பதவியேற்றுக்கொண்டனர். காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர் ராகுல் காந்தி வாழ்க எனக் கூறி பதவியேற்றனர். மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி-யான ஆர்.சுதா, தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் மீது உளமாற உறுதி கூறுவதாக தெரிவித்தார்.

கோபிநாத் எம்.பி

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் எம்.பியான கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுகொண்டார். முழுவதுமாக தெலுங்கில் பேசி பதவியேற்ற அவர், இறுதியில், “நன்றி, வணக்கம், ஜெய் தமிழ்நாடு” என்று தெரிவித்தார்.

x