கரூர் அருகே திருடன் என நினைத்து வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் (30), கதிர்வேல் (28), பாலாஜி, முத்து, சரண்ராஜ். இவர்கள் 5 பேரும் கடந்த சனிக்கிழமை அன்று வாங்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் மது அருந்தியுள்ளனர். இவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர் ஒருவர் அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது இதனைக் கண்ட, மதுபோதையில் இருந்த வினோத் உள்ளிட்ட 5 பேரும் அந்த இளைஞரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே வடமாநில இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
தகவலறிந்த வாங்கல் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வினோத் மற்றும் கதிர்வேலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.