கடனை திருப்பிச் செலுத்தாததால் கால் சென்டர் உரிமையாளர் கடத்தல்: 8 பேர் கைது


கடன்தொகையை செலுத்தாதவர் கடத்தல்

கொல்கத்தாவில் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக கால் சென்டர் உரிமையாளரை கடத்திச் சென்ற 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் முகமது இர்பான். இவர் கடந்த 21ம் தேதி அன்று மாலை தனது வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து முகமது இர்பானின் தந்தை, மறுநாள் தில்ஜாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தெரியாத எண்களிலிருந்து தனக்கு வந்த செல்போன் அழைப்புகளில் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் தனது மகனை கொன்று விடுவதாக சிலர் மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

அதைத் தொடர்ந்து கொல்கத்தா காவல் துறை, ரவுடி தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் முகமது இர்பான், மத்திய கொல்கத்தாவில் உள்ள நியூ மார்க்கெட் அருகே இருந்து காரில் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. கடத்தல்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றியவாறே முகமது இர்பானின் தந்தைக்கு போன் செய்துள்ளனர்.

ஆனால், அவரிடமிருந்து பணம் எதுவும் கிடைக்காததால் கிழக்கு கொல்கத்தாவின் முகுந்தபூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் முகமது இர்பானை அடைத்து வைத்தனர்.

இந்நிலையில் போலீஸார் அங்கு சென்று அவரை மீட்டு, டேவிட் (எ) கைரிக் முகர்ஜி, விவேக் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கால்சென்டர் நடத்தி வந்த முகமது இர்பான், டேவிட்டிடம் ரூ. 16 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

கைது

இந்நிலையில் கால்சென்டர் மூடப்பட்டதால், முகமது இர்பானால், கடன் தொகையை திருப்பிச் செலுத்த இயலவில்லை. இதனால் பணத்தை வசூலிக்க முகமது இர்பானை, டேவிட் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய அசுதோஷ் ராய், சூரஜ் குமார் சிங், ரோஹித் ராய், முகமது அல்குவாமா, அமன் குமார் குப்தா, குந்தன் ஸ்ரீவஸ்தவ் ஆகிய மேலும் 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கொல்கத்தா போலீஸார் தேடி வருகின்றனர்.

x