[X] Close

தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


heavy-rain

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 08:56 am
  • அ+ அ-

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாலத்தீவுகள் முதல் தெற்கு கொங்கன் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. மேலும் மாலத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 29 செமீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 22 செமீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 16 செமீ, திருச்செந்தூரில் 11 செமீ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 9 செமீ, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close