மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்வுகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
18வது மக்களவைக்கான சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், சபாநாயகர் பதவிக்கு தேர்தல் உருவாகும் சூழல் இல்லாமல் ஒருமித்த கருத்துடன் சபாநாயகரை தேர்வு செய்ய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் பாஜக நியமித்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் இருவரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று மதியம் 12 மணி வரை உள்ளது. தேர்தல் நடத்தும் சூழல் உருவானால் நாளை நடைபெறும். மக்களவையில் இதுவரை அனைத்து சபாநாயகர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த முறை தேர்தல் நடந்தால், அது முதல் தேர்தலாக இருக்கும்.
சபாநாயகர் பதவிக்கு பாஜக யாரை முடிவு செய்துள்ளது என்பது குறித்து அக்கட்சி சமிஞை எதுவும் வெளியிடவில்லை. எனினும், 17வது மக்களவை சபாநாயகராக பணியாற்றிய ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் உலவுகின்றன. இடைக்கால, சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தாப்பும், சபாநாயகராக கொண்டுவரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.