வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை... ஆஸ்திரேலியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது!


ஆப்கானிஸ்தான் அணி

வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று முதல் முையாக டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று கிங்க்ஸ்டவுன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குரூப் ஒன் சுற்றில் அரை இறுதிக்கு தகுதி பெறப்போகும் அணி எது என்பதை முடிவு செய்வதற்கான ஆட்டம் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள்

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிறவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த போதும், ரஷீத் கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேசம் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரிசாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது.

அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 54 ரன்கள் குவித்தார். ஆனால் பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். 11.4 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 19 ஓவராக குறைக்கப்பட்டு வங்கதேச அணிக்கு 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மழைக்குப் பின்னர் போட்டி துவங்கிய போது ரன் எடுக்க முடியாமல் வங்கதேச அணி வீரர்கள் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழுந்து கொண்டு இருந்ததால், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் மழை குறிக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

18 வது ஓவரை வீசிய நவீன்-உல்-ஹக் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், வங்கதேச அணி 17.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன்-உல்-ஹக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றின் அரை இறுதிச்சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

x