அமெரிக்காவில் சுறா மீன்கள் தாக்கியதில் பிரபல ஹாலிவுட் நடிகர் தமயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் ஜானி டெப் நடிப்பில் வெளியான படம் 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: ஆன் ஸ்டிரேஞ்சர் டைட்ஸ்'. இந்த படத்தில் அவருடன் நடித்தவர் தமயோ பெர்ரி (49). இவர் அலைசறுக்கு விளையாட்டில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
ஓஹூ தீவில் பிறந்து வளர்ந்த தமயோ பெர்ரி, ஹவாய் தீவில் சிறந்த அலை சறுக்கு விளையாட்டு வீரராக திகழ்ந்தார். இதில், 8 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பெர்ரி, நீரில் எவரேனும் தவறி விழுந்து விட்டால் அவரை நீந்தி சென்று, மீட்டு கரைக்கு கொண்டு வரும் உயிர்காப்பாளர் பணியையும் செய்து வந்திருக்கிறார்.
இவர் 'சார்லஸ் ஏஞ்சல்ஸ் 2', 'ப்ளூ க்ர'ஷ் உள்ளிட்ட படங்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். அவர், கடந்த ஜூன் 24-ம் தேதி அலை சறுக்குப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மலேகஹனா கடற்கரை பகுதியில் அவரை சுறா தாக்கியது. இதனால் அவர், உடனடியாக கடலோர காவல்படைக்கு அவசரகால உதவி வேண்டி போன் செய்துள்ளார். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த கடற்படை காவலர்கள் காயத்துடன் போராடிக் கொண்டிருந்த தமயோ பெர்ரியை கரைக்குக் கொண்டு வந்தனர்.
ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்தார். அவரது உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுறா மீன்கள் கடித்த தடங்கள் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமயோ பெர்ரி இறந்த பகுதியில் சுறா தாக்குதல் இருக்கிறது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
சுறா மீன்கள் தாக்கியதில் பெர்ரியின் ஒரு கை மற்றும் கால் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமயோ பெர்ரி மறைவுக்கு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. தமயோ பெர்ரி மறைவிற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.