குலதெய்வ வழிபாட்டை தடை செய்யச் சொன்னேனா?.... தமிழ்நாடு ஆளுநர் போலீஸில் பரபரப்பு புகார்!


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆளுநர் ரவி.(கோப்பு படம்).

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக வந்த செய்தி போலியானது என்றும், இது தொடர்பாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூக ஊடகங்களில் நேற்று செய்தி பரவியது. இந்த தகவல் பொய் என்றும், இதைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும். தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்- ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தப் போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாளிகை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த பிரச்சினையை உடனடியாக எங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x