ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி... அரையிறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது!


இந்திய அணி வீரர்கள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

ரோகித் சர்மா

ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகள் எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உட்பட 92 ரன்கள் குவித்து மிட்சல் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் 31 ரன்களும், சிவம் தூபே 28 ரன்களும், ஹர்திக் பாண்டியா 27 ரன்களும் எடுத்தனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், வார்னர் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்

ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட், ஜஸ்ப்ரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் 76 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மார்ஷ் 37 ரன்களிலும், மேக்ஸ்வெல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 14வது ஓவர் வரை இருந்த நிலையில் அதன் பின்னர் இறுதி ஓவர்களை வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதனால் ரன்களைக் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தள்ளாடியது.

இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணியின் இந்த தோல்வி காரணமாக இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இடையிலான போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதே சமயம் வங்கதேசம் வெற்றி பெற்றாலும், ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன்களைக் குவித்து இருந்தால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை வங்கதேசம் சிறப்பான வெற்றியை பதிவு செய்தால், ஆஸ்திரேலியா அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

x