முதலமைச்சரின் நடவடிக்கையும் தாண்டி, காவல்துறை, வருவாய்த் துறை, மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியவற்றில் கருப்பு ஆடுகள் இருப்பதால் கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் தமிழகத்தில் இருக்கக் கூடாது என திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவில் உள்ள கருப்பு ஆடுகள் காரணமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய உற்பத்தி தொடர் கதையாக உள்ளது” என்றார்.
மேலும், ”மதுவின் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வராயன் மலையில் சாராய உற்பத்தி தொடர் கதையாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து மக்கள் பெருமளவில் கள்ளச்சாராயத்தால் சீரழிந்து வருகின்றனர். வியாபாரிகளை கண்டித்த போதும், அவர்கள் பொது மக்களை மிரட்டி உள்ளனர். எனவே 15 ஆண்டுகளாக இங்கே பணி செய்த அனைத்து துறை அதிகாரிகளின் விவரங்களையும் கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார் .
தொடர்ந்து பேசிய அவர், ”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தாது. திமுக வேட்பாளர் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சிகள் தங்கள் கடமைக்காக சிபிஐ விசாரணை கேட்டுள்ளனர். போன ஆட்சி காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ராஜினாமா செய்தார்? அதானி துறைமுகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு போதை, கஞ்சா பொருட்கள் வருகிறது. குஜராத்தில் இருந்து போதை அன்பு ஏவப்படுகிறது.” என்றார்.