"ரஜினி சார் மூலமாகதான் நான் சினிமாவுக்கு வந்தேன். ’அருணாச்சலம்’ படத்தில் அவரை தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தேன்” என நடிகர் சிங்கம்புலி கூறியுள்ளார்.
விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ’மகாராஜா’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் நடிகர் சிங்கம்புலி. அவருடன் இந்து தமிழ் திசைக்காக நேர்காணல் செய்திருந்தோம். படம் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்தவர், சினிமாத்துறையில் தனது ஆரம்ப நாட்கள் குறித்தும் பேசினார்.
”நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்று பள்ளிக் காலத்தில் இருந்தே விரும்பினேன். பொறியியல் படித்திருந்தாலும் சினிமாவில்தான் என் கனவு இருந்தது. இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது ரஜினி சாரின் சகோதரர் சத்யநாராயணா சார் எனக்கு பழக்கம். அவர் மூலம் ரஜினி சாரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது சிபாரிசில்தான் சுந்தர்.சி-யின் ‘அருணாச்சலம்’ படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தேன். ரஜினி சாரை செட்டில் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். யாராவது அவருடன் பேசினால் உடனே அவரிடம் போய் ‘என்ன பேசினீர்கள்?’ என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.
அந்தப் படத்தில் ரஜினி சார் ‘இனிதான் ஆரம்பம்’ என எழுதுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதில் பலருடைய கையெழுத்தை முயற்சி செய்து பார்த்தார்கள். யாருடையதும் திருப்தியாக இல்லை. உடனே, நான் அந்த வாக்கியத்தை எழுதிக் கொடுத்தேன். என்னுடைய கையெழுத்தைப் பார்த்ததும் ரஜினி சாருக்குப் பிடித்து விட்டது. ”‘சிங்கம்புலி’ பெயர் நல்லாருக்கே! சிங்கம், புலின்னு நாம டபுள் ஆக்ட் பண்ணிருவோமா? இனிமேதான் உனக்கு ஆரம்பம்!” என வாழ்த்தினார்” என்றார்.