கால்நடைகளை தெருவில் மேயவிட்டால் ஏலம் விடப்படும்: அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை


சாலையில் திரியும் கால்நடைகள்

சாலைகளில் மேய விடப்படும் கால்நடைகள் 3வது முறையாக பிடிபட்டால், அவை ஏலம் விடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக சாலைகளில் விடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உட்பட பெரு நகரங்களில் இவ்வாறு சாலையில் மேயும் கால்நடைகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு, சாலை விபத்துகளிலும் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் எருமை மாடு ஒன்று பெண் ஒருவரை முட்டி அரை கிலோ மீட்டருக்கும் அதிகமாக இழுத்துச் சென்றதில் அவர் படுகாயம் அடைந்து தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அமைச்சர் கே.என். நேரு

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். அப்போது பேசிய அவர், ”சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக இந்த மாடுகள் பிடிபட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் ஏலம் விடப்படும்.” என்றார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

மேலும், ”நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 75 கோடி செலவில் புதிய மாமன்றக்கூடம் கட்டப்படும். சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா தனியார் பங்களிப்பு முறையில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். நாய்களுக்கு கருத்தடை செய்து அவை இனப்பெருக்கம் செய்யாமல் பார்த்துக் கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்

x